கடந்த இரண்டு நாட்களில், யாழ்பாணத்தில் 13 சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டது குறித்தோ, அவர்களின் உடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டு இரகசியமாய் அடக்கம் செய்யப்பட்டது குறித்தோ ஏதும் அறியாதவனாக, மற்றவர்களைப் போலவே நானும் வேலைக்கு விரைந்துகொண்டிருந்தேன்.
(அந்நாட்களில் ஒருவருக்கொருவர் செய்திகளை பறிமாறிக்கொள்ள, வாட்சப், பேஸ்புக், எஸ்எம்எஸ், மொபைல் எதுவும் இல்லை ஏன் தொலைபேசிகூட தெருவுக்கு ஒன்று அல்லது ஊருக்கு ஒன்று என வசதிபடைத்தவர்களின் வீடுகளில் மட்டுமே இருந்தது)
வேலைத்தளம் சென்றடைந்ததும், அன்று வேலைக்கு வந்திருந்த ஊழியர்கள் வழமைக்கு மாறாக வெளி முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்குள் எங்கள் மேலதிகாரி (காலஞ்சென்ற ரிச்சட் ஏபிரகாம் அவர்கள்) எல்லோரையும் உடனடியாக தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக போய் சேரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வேளை தமிழ் ஊழியர்கள் அவரவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக போய்சேர சிங்கள ஊழிய நண்பர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உதவிசெய்ததை மறக்க முடியாது.
எங்கள் காரியாலயத்துக்கு அருகில் இருந்த வேறொரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் கடமையாற்றிய (காலஞ்சென்ற) ரோய் ரிபேய்ரா என்ற நண்பர் என்னை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு என்னை வீட்டில் பாதுகாப்பாய் விட்டுச் சென்றார். வீடு வரும் வழியில் குறிப்பாக புறக்கோட்டைப் பகுதியில் அநேக கடைகள் தீ மூட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்ததும் மக்கள் வீதிகளில் அல்லோல கல்லோலப்பட்டு எங்கு போவதென்று அறியாதவர்களாக. திக்குத் திசை தெரியாமல் சிதறி ஒடிக்கொண்டிருந்ததுமான காட்சி இன்றும் என் கண்முன் நிழற்படமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
எங்கள் வீடு, சுமார் 30 வீடுகள் அமைந்திருந்த ஒரு ஒழுங்கைக்குள் இருந்தது. நாட்டில் ஏற்பட்ட திடீர் அசம்பாவிதத்தினால் மக்கள் அனைவரும் அச்சத்துடன் வீட்டுக்கு வெளியே நின்று கூட்டங்கூட்டமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை காடையர்கள் எங்கள் வீடுகளை தாக்க வந்தால் என்ன செய்வது என்பதுதான் எல்லோருடையதும் கேள்வியாக இருந்தது.
வயதில் முத்தவர்கள் செய்வதறியாமல் திகைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள், எங்கே ஓடி தப்புவது என கலங்கிக்கொண்டிருந்தார்கள். வாலிபர்கள், நாம் திருப்பித் தாக்குவோம் என திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நீங்கள் பயப்படவேண்டாம் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என உயிருக்கு உத்தரவாதம் தந்தார்கள் அயலக சிங்கள நண்பர்கள்.
ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், கட்டவிழ்த்துவிடப்பட்ட கோரம் தொடர்ந்து சிலநாட்களாக நடந்தேறிக்கொண்டுதான் இருந்தது. ஒருநாள் பிற்பகல் 3 மணியிருக்கும் அப்பொழுது 'இதே அவர்கள் வந்துவிட்டார்கள் வந்துவிட்டார்கள்' என்ற அலறல் கேட்க எல்லோரும் வீட்டின் பின்வாசல் வழியாக அங்கிருந்த ஒரு மதிலைக் கடந்து அடுத்த ஒழுங்கையில் இருந்த (காலஞ்சென்ற) மல்லவராச்சி என்ற சிங்கள நண்பரின் விட்டில் அடைக்கலம் தேடி ஓடினார்கள்.
பிறந்து ஒருமாத கைக்குழந்தையை ஏந்திக்கொண்டு, மதில் ஏற முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த என்னுடைய அண்ணியின் கையிலிருந்து குழந்தையை, கையில் எடுத்து, அவர் மதிலின் மறுபுறம் பாய்ந்ததும் குழந்தையை அவர்களிடம் கொடுத்தோம். எங்கள் வீட்டில் யாருமே இல்லை. வருவது வரட்டும் என்ற அசட்டுத் துணிச்சலுடன் நான் மட்டும் வீட்டுக்குள் நின்று, ஜன்னல் வழியாக வெளியே என்ன நடக்கின்றது என மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். சுமார் 20 - 25 பேர் அடங்கிய அந்த காடையர் கும்பல், வசதிபடைத்த ஒருசில வீடுகளைப் பதம்பார்த்து, தாங்கள் எடுத்துவந்த இரும்பு கம்பிகளினால் கதவுகளை உடைத்து, வீட்டைச் சூரையாடினர், எங்கள் எதிர் வீட்டாரின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை தீ மூட்டி கொழுத்தினர். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து அங்கு வந்த சில சிங்கள அயலக நண்பர்கள் (சீலாவதி, ராஜா, லக்ஷ்மன்.. ) அவர்களிடம் அந்த இடத்தைவிட்டு போகும்படி கெஞ்சிக் கேட்டுகொண்டதை மறக்கமுடியாது.
சில நிமிடங்களாய் தாண்டவமாடிய அந்த கோரம் ஒருவிதமாய் நிறைவடைந்தது. ஆனாலும் அவர்கள் மறுபடியும் தாக்க வரலாம் என்ற அச்சம் எல்லோர் மனதிலும் இருந்தது. எங்கள் அயலகத்தார் ஒருசிலர் தங்கள் உடமைகளை இழக்கக் கொடுத்தாலும் நான் அறிந்த அளவில் உயிர் இழப்பு ஏதும் இடம்பெறவில்லை. அந்த கோரபயங்கர அனுபவத்திலிருந்து வெளிவர எமக்கு பல ஆண்டுகள் சென்றன, அநேக ஆலயங்களும் பாடசாலைகளும் அகதி முகாம்களாக மாறி அதில் அநேகர் தஞ்சமடைந்தனர். பலர் பிறந்த மண்ணையும் தங்கள் உறவுகளையும் விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றார்கள்.
கறுப்பு ஜூலை என்று நினைவுகூரப்படும் அந்த 83 இனக் கலவரத்தில் சுமார் 3000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், சுமார் 1 இலட்சத்தி 50 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களை இழந்தார்கள் என்றும், சுமார் 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் கடைகள் தீவைக்கப்பட்டன என்றும், சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பெருமதியான பொருளாதார இழப்பு ஏற்பட்டது எனவும் விக்கிபீடியா பதிவுசெய்துள்ளது.
என்னுடைய அனுபவத்தைவிட ஒருவேளை மற்றவர்களின் அனுபவம் மிக பயங்கரமானதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருந்திருக்கலாம். அந்த அனுபவத்தின் பாதிப்பினால் இன்றைக்கும்கூட, இரவு பயங்கர கனவுகண்டு நித்திரையிலிருந்து திடுக்கிட்டு எழுந்திருக்கும் சிலரை நான் அறிவேன். எந்த அனுபவமாக இருந்தாலும் அந்த அனுபவத்தின் ஊடாக கடந்துபோனவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான வலியும் வேதனையும் புரியும். வாழுகின்ற மக்களுக்கு அன்று வாழ்ந்தவர்களின் அந்த அனுபவம் ஒரு கசப்பான பாடமாக இருக்கட்டும்.
(Written by Nereus Fernando)

No comments:
Post a Comment